யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.. முதுமலையில் பரபரப்பு!

 
Mudumalai

முதுமலையில் 75 வயது முதியவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் இயங்கி வருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் தற்போது செயல்பட்டுவரும் இந்த முகாமில் யானை - மனித எதிர்கொள்ளல்களை ஏற்படுத்தும் யானைகள், தாயை இழந்து தவிக்கும் யானை குட்டிகள் ஆகியவற்றை மீட்டு பராமரித்து வருகின்றனர். மேலும், இளம் யானைகளுக்கு பழங்குடிப் பாகன்கள் மூலம் பயிற்சியளித்து கும்கி யானைகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

dead-body

வளர்ப்பு யானைகள் என்றாலும் ஒருசில யானைகள் சில சமயங்களில் ஆக்ரோஷமாக காணப்படுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. பாகன்களையே வளர்ப்பு யானைகள் தாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது ஏற்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் மசினி என்ற வளர்ப்பு யானை அதன் பாகன் பாலன் என்பவரைத் தாக்கிக் கொன்றது.

இந்த நிலையில், வில்சன் என்ற வளர்ப்பு யானையை அதன் பாகன் மேய்ச்சலுக்காக இன்று காலை அழைத்துச் சென்றார். அப்போது, யானைப்பாடி குடியிருப்பு பகுதியைச்‌ சேர்ந்த பழங்குடி மாதன் (75) என்பவர் எதிரே வந்திருக்கிறார். இதைக் கண்ட பாகன் விலகிச் செல்லும்படி எச்சரித்திருக்கிறார். அதை கவனிக்காத மாதன் யானைக்கு அருகில் சென்றிருக்கிறார். அப்போது திடீரென வில்சன் யானை தாக்கியதில் படுகாயமடைந்த மாதனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Mudumalai

இது குறித்து வனத்துறை அதிகாரிகள், “வில்சன் யானையை வழக்கமாக அந்த வழியாகத்தான் அழைத்துச் செல்வார்கள். இன்று காலையும் அப்படித்தான் அழைத்துச் சென்றிருக்கின்றனர். 'யானை வருது ஓரம் போங்க' என பாகன் எச்சரித்தும் அவர் கவனிக்கவில்லை. பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். மாதன் குடும்பத்துக்கு நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன” என்றனர்.

From around the web