நண்பனின் மனைவியுடன் தகாத உறவு.. காதலியின் கணவரை வெட்டிக் கொன்ற காதலன்!

 
Krishnagiri

கிருஷ்ணகிரி அருகே மனைவியுடன் திருமணம் தாண்டிய உறவிலிருந்த நண்பரைக் கண்டித்த கணவர் தூங்கிக்கொண்டிருந்த போது கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்த முதுகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணப்பா. இவரது மகன் துர்கேஷ் (25). கூலித்தொழிலாளியான துர்கேஷ், கடந்த 2017-ம் ஆண்டு சோனியா என்கிற உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். துர்கேஷ் உடன் நண்பர்களாக சுற்றிவந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நடராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நடராஜுக்கும், சோனியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்து இருக்கின்றனர். இதையறிந்த துர்கேஷ், தகாத உறவைக் கைவிடும்படி தன்னுடைய மனைவியையும் நடராஜையும் கண்டித்திருக்கிறார். ஆனாலும் அவர்களின் உறவு தொடர்ந்துள்ளது. இதனால் இருவரையும் எச்சரித்ததோடு மனைவியை துர்கேஷ் அடித்திருக்கிறார்.

Murder

இதனால் ஆத்திரமடைந்த நடராஜ், தங்களது தகாத உறவுக்குத் தடையாக இருக்கும் துர்கேஷைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். இதற்கு சோனியாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று அதிகாலை 1 மணி அளவில் நடராஜ் தன்னுடைய சித்தப்பா மகன் மது என்பவருடன் துர்க்கேஷின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். திட்டமிட்டபடி சோனியா கதவைத் திறந்து வைத்ததால், அவர்கள் வீட்டுக்குள் எளிதாக நுழைந்தனர். அங்கு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த துர்கேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி இருக்கின்றனர்.

இதனால் துர்கேஷும் அவரின் குடும்பத்தினரும் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் நடராஜ், மது ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அரிவாளால் வெட்டப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த துர்கேஷை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து பேரிகை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த நடராஜ், மது ஆகியோரைக் கைது செய்தனர்.

Berigai PS

கைதான நடராஜ், “துர்கேஷின் மனைவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது திருமணம் மீறிய உறவாக மாறியது. இது தெரிந்து, துர்கேஷ் எங்கள் இருவரையும் கண்டித்து வந்தார். இந்த நிலையில், துர்கேஷ் என்னுடைய போட்டோவை வைத்துக்கொண்டு ஆள்வைத்து என்னைக் கொல்லப் போவதாகப் பேசிவந்தது எனக்குத் தெரியவந்தது. அதையடுத்து நான், என்னுடைய சித்தப்பா மகன் மது, துர்கேஷின் மனைவி ஆகியோருடன் சேர்ந்து துர்கேஷைக் கொலைசெய்யத் திட்டமிட்டு, செய்துமுடித்தேன்” எனக் கூறியிருக்கிறார். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web