பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற 8 வயது சிறுமி.. தண்ணீர் தொட்டியில் பிணமாக மீட்பு.. கோவையில் பரபரப்பு!

 
Coimbatore

கோவை அருகே பிறந்தநாள் விழாவிற்குச் சென்ற 8 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரன். இவர், கடந்த 5 ஆண்டுகளாக கோவை மாவட்டம் பேரூர் அடுத்த பச்சாபாளையத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு செண்பகவல்லி (32) என்ற மனைவி உள்ளார். இவர், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மழலையர் தற்காலிக ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகன் மற்றும் 8 வயதில் கோகுலப்பிரியா என்ற மகளும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் வசிக்கும் வீட்டின் பக்கத்து வீட்டில் குழந்தைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அதற்கு கோகுலப்பிரியாவை வந்து கலந்து கொள்ளுமாறு அழைத்து உள்ளனர். அதற்கு அவரது தாயார் செண்பகவல்லி பிறந்தநாள் விழாவிற்கு செல்ல வேண்டாம் என கூறி உள்ளார். இருந்த போதும் கேக் வெட்டிவிட்டு உடனே திரும்பி சென்று விடலாம் என கூறி குழந்தை கோகுலப்பிரியாவை அழைத்து உள்ளனர்.

Dead

பின்னர் கோகுலப்பிரியா பிறந்த நாள் விழாவிற்கு சென்று உள்ளார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து கோகுலப்பிரியாவின் தாயார் செண்பகவல்லி குழந்தையைத் தேடி சென்று உள்ளார். ஆனால் குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் பக்கத்து வீட்டில் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது குழந்தை கோகுலப்பிரியா உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டு இருந்தார்.

உடனே குழந்தையை மீட்ட வீட்டின் உரிமையாளர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை கோகுலப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Perur PS

இதற்கிடையே குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக குழந்தையின் தாயார் செண்பகவல்லி பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூடிக் கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை எப்படி விழுந்து இறந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web