மாநில உரிமை மீட்க போன எடப்பாடி பழனிசாமிக்கு அமித் ஷா தந்த உடனடி பரிசு!!

மாநில உரிமைகளை மீட்பதே என்னுடைய முதல் வாக்குறுதி என்று என்ன நேரத்தில் எடப்பாடி பழனிசாமி சொன்னாரோ தெரியவில்லை, டெல்லியிலிருந்து அமித் ஷா கொடுத்த பேட்டியால் ஒட்டு மொத்த அதிமுகவினரும் ஆடிப்போய் உள்ளனர்.
கூட்டணி ஆட்சி தான் முதலமைச்சர் அதிமுக தான், பாஜக அந்த அரசில் பங்குபெறும் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார். ஆங்கில ஊடகத்திற்கான பதிலிலும் கூட்டணி அரசு என்று தெளிவாகப் பொருள் வரும் Coalation Goverment என்றே அச்சேற்றி உள்ளனர்.
இன்னமும் கூட்டணி வேறு கூட்டணி அரசு வேறு என்று யார் சொன்னாலும், அமித் ஷா தெளிவாகவே உள்ளார். வடக்கிலும் தெற்கிலும் ஏற்கனவே பாஜக கையாண்டு வெற்றி பெற்ற பார்முலாவைத் தான் கையிலெடுத்துள்ளார். உத்தரபிரதேசம், பீகார், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா என ஒவ்வொரு மாநிலத்திலும் பெரிய கட்சியை கையில் எடுத்துக் கொண்டு கூட்டணி ஆட்சி தான் முதலில் பாஜக அமைத்து வந்துள்ளது. பின்னர் கூட்டணி கட்சியை மென்று முழுங்கி விட்டு தனியாக ஆட்சியைப் பிடிக்கும் சூட்சமத்தை செயல்படுத்தி வருகிறது.
அதிமுகவை 100 இடங்களுக்கு மேல் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை. குறைந்த பட்சம் 140 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் எந்தக் கட்சியும் தனியாக ஆட்சி அமைக்க முடியும். எடப்பாடி பழனிசாமிக்கு அந்த வாய்ப்பைத் தருவதற்கு அமித் ஷா தயாராக இல்லை என்பதே அவருடைய பேட்டிகளில் புரிகிறது.
ஒரு வகையில் இது திமுகவுக்கு பெரும் பலமாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பாஜக கூட்டணி என்பதற்கே அதிமுக தொண்டர்கள் முகம் சுழிக்கும் வேளையில், கூட்டணி ஆட்சி கூட்டணி ஆட்சி என்று பாஜக முழங்கும் போது அதிமுக தொண்டனே அந்தக் கூட்டணிக்கு வாக்களிக்கப் போவதில்லை.
விஜய் ஐ வைத்து கிறித்துவ, இஸ்லாமிய சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்கலாம் என்ற கணக்கும் எடுபடப் போவதில்லை ஒரு வேளை கடைசி நேரத்தில் துணிச்சல் வந்து எடப்பாடி பாஜகவை கழட்டி விட்டால் அது அதிமுகவின் எதிர்காலத்தை நீட்டிக்கும். இல்லையென்றால் தோல்வி அடைந்தாலும் அதிமுக வாக்கு வங்கி சரிந்து விட்டது, பாஜக வாக்கு வங்கி அதிகரித்து விட்டது என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கி அதிமுகவை டம்மியாக்கும் செயலையும் செய்யத் தயங்காது பாஜக.
அதிமுக கட்சியிலிருந்து தான் முதலமைச்சர் என்று சொன்ன அமித் ஷா, அது எடப்பாடி பழனிசாமி தான் என்று சொல்லத் தெரியாதா என்ன? எடப்பாடி பழனிசாமியை எந்த நேரத்திலும் தூக்கியெறியவும் தயார் என்பதையே அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மாநில உரிமைகளை மீட்பதே என்னுடைய முதல் வாக்குறுதி என்றார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அவருடைய தனிப்பட்ட உரிமையை மீட்பது கூட அவர் கையில் இல்லை என்றே தெரிகிறது.
எம்ஜியார் உருவாக்கி ஜெயலலிதா பேணிக்காத்த அதிமுகவுக்கு இன்னும் என்னென்ன சோதனைகள் காத்திருக்கிறதோ தெரியவில்லை!!
-ஸ்கார்ப்பியன்