எம் பாட்டையெல்லாம் படமா எடுக்குறாங்க.. ஆனால்.. புலம்பும் கவிஞர் வைரமுத்து!!

என்னுடைய பாடல் வரிகளையெல்லாம் திரைப்படங்களுக்கு பெயராகச் சூட்டுகிறார்கள் ஆனால் என்னிடம் அனுமதி பெறுவதில்லை என்று கவிஞர் வைரமுத்து அங்கலாய்ப்பாக ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
”என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை
ஒன்றா இரண்டா... பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன்
இப்படி இன்னும் பல... சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன் ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?” என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
ஆனால் வைரமுத்து பதிவில் அவருக்கு எதிரான தகவல்களே கொட்டிக்கிடக்கிறது. பூவே பூச்சூடவா படத்திற்குத் தான் அதே தலைப்பில் பாட்டெழுதினார் வைரமுத்து. அவர் பாட்டைக் கேட்டு இயக்குனர் ஃபாசில் தலைப்பு வைத்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் வைரமுத்துவிடம் எப்படி சொல்லாமல் தவிர்த்திருக்க முடியும்.
ரஜினிகாந்த் நடிப்பில் 1983ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தங்கமகன். அந்தப் படத்தின் தலைப்பை வைத்துத் தான் ரஜினியின் பாட்ஷா படத்தில் தங்கமகன் என்று தொடங்கும் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் . காளை காளை முரட்டுக்காளை என்று ரஜினியின் படப்பெயர்களை வைத்துத் தான் மனிதன் படத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார். இவர் இயக்குனர்களை குற்றம் சாட்டினால் அந்தப் படங்களின் இயக்குனர்களும் இவரைக் குற்றம் சாட்டலாம் தானே!
மேலும் வைரமுத்து மீது மற்றொரு புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எத்தனையோ கவிதைகள், நாவல்கள் எழுதிய வைரமுத்து திருக்குறளுக்கு இது வரையிலும் உரை எழுதவில்லை. இப்போது எழுதி முடித்துள்ளதாகக் கூறி தலைப்பையும் அறிவித்துள்ளார். ஆனால், இந்த எண்ணம் அவருக்கு வரக்காரணமாக இருந்தது ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர் தான் என்ற உண்மை இப்போது வெளிப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்க்காரி என்ற பெண் எழுத்தாளர் எழுதி 2023ம் ஆண்டு வெளியான திருக்குறள்3.0 புத்தகத்திற்காக 2024 ஆண்டு அயலகத் தமிழர் நல நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்க்காரி க்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளார்.
இந்த தமிழ்க்காரி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் வைரமுத்துவின் கவிதைகளை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இதன் காரணமாக மரியாதை நிமித்தமாக வைரமுத்துவை சந்தித்து தன்னுடைய திருக்குறள் 3.0 புத்தகத்தைக் கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார்.
அந்த புத்தகத்தில் எளிய உரையுடன் ஒவ்வொரு குறளுக்கும் மூன்று வரி கவிதைகளும் எழுதியுள்ளார் தமிழ்க்காரி. திருக்குறள் வரலாற்றிலேயே குறளுக்கு கவிதை வடிவில் உரை எழுதியது தமிழ்க்காரி மட்டுமே! அதுவும் அனைத்து குறள்களுக்கும் விளக்கம் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமையும் பெற்றவர்.
தன்னுடைய கவிதைகளை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் 1330 திருக்குறள்களுக்கும் கவிதை வடிவத்தில் விளக்கம் எழுதியுள்ளாரே என்ற ஆச்சரியத்துடன், இதை எப்படி நான் தவற விட்டேன் என்று எண்ணியதால் தான் தற்போது திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியுள்ளாராம்.
மற்றவர்கள் தன் படைப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று அங்கலாய்க்கும் கவிஞர் வைரமுத்துவுக்கே ஒரு பெண் எழுத்தாளர் தானே திருக்குறளுக்கு உரை எழுதத் தூண்டியிருக்கிறார். இதற்காக அந்த பெண் எழுத்தாளரை மனம் உவந்து பொது மேடையில் பாராட்டுவாரா கவிஞர் வைரமுத்து?