அடுத்த 24 மணிநேரத்திற்கு அலர்ட்... தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
Rain

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (மே 10) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (மே 11) காலை 5.30 மணி அளவில் ‘மோக்கா’ புயலாக வலுப்பெற்று இன்று காலை 8.30 மணி அளவில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு தென்மேற்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும்.

அதன் பிறகு நாளை (மே 12) காலை முதல் வடக்கு வடகிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து நாளை மாலை மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிற 13.05.2023 மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வரை உயர்ந்து, 14.05.2023 காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக இன்று (மே 11) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நிலகிரி, கோயம்புத்தார், தேனி, திண்டுக்கல், திருப்பூர். தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (மே 12) முதல் 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36- 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web