அதிமுக - பாஜக கூட்டணி... கட்சிக்குள் எழும் கலகக்குரல்?

 
திமுக ஆட்சிக் காலத்தில் தான் நில அபகரிப்பு அதிகம்!அமைச்சர் ஜெயக்குமார் சராமரி குற்றச்சாட்டு!

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது அதை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அறிவித்தது போன்ற செயல்களால அதிமுக தொண்டர்களிடையேயும் முதல்கட்ட நிர்வாகிகளிடையேயும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகத் தெரிகிறது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்தே இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தொண்டர்கள் கருதுவதாகவும், அண்ணாமலை நீக்கம் என்பது வெறும் கண் துடைப்பு நாடகம் எனவும் நம்புகிறார்கள்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான ஜெயக்குமார் கூறியுள்ள தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் எடப்பாடி பழனிசாமியின் படம் தவிர்க்கப்பட்டுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் ராயபுரம் தொகுதியில் தோற்றேன் என்று வெளிப்படையாகச் சொன்னவர் ஜெயக்குமார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே எடப்பாடி பழனிசாமியின் படத்தை அவர் தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கணிசமான அளவிற்கு இஸ்லாமிய சமுதாய மக்கள் வசிப்பதால் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பிரமுகர்களும் கவலையில் உள்ளதாகத் தெரிகிறது. 

நம்மிடம் பேசிய மூத்த கட்சித் தொண்டர் ஒருவர் சொன்னதாவது,” பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடிப்பதை விட எதிர்க்கட்சியாக இருப்பது தான் அதிமுக கட்சிக்கு நல்லது என்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம். கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கூட்டணி கட்சி துணையுடன் ஆட்சியைப் பிடித்து கூட்டணிக் கட்சியை ஒழித்துக் கட்டிய பாஜகவை நாங்கள் நன்கு அறிவோம்.

எங்களுக்கு ஆட்சியை விட கட்சியே முக்கியம். 2026ல் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடித்தாலும் அது நித்யகண்டம் பூரண ஆயுசு என்பதையும் அறிவோம். எங்களுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வருத்தம் இல்லை. அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்தே இந்தக் கூட்டணியை பாஜக உருவாக்கியுள்ளது.

கடந்த தேர்தலில் 4 தொகுதிகளை அதிமுக ஆதரவுடன் பாஜக வெற்றி பெற்றது. 2026 தேர்தலில் உண்மையான அதிமுக தொண்டன் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஒரு வகையில் 2026ம் ஆண்டு  தேர்தல் அதிமுவுக்கு சோதனைக் காலம் தான் ஆனால் அதையும் கடந்து அதிமுக என்ற கட்சி நீடித்து நிலைத்து நிற்கும். பெரும்பான்மையான தொண்டர்களின்  எண்ணமும் இது தான்” என்று சொல்லி முடித்தார்.


 

From around the web