அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
OPS

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24-ம் தேதி வரை வெளியிட வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதிமுக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக வேட்புமனுவுக்கான கட்டணம் ரூ.25 ஆயிரத்தை செலுத்தினார். அப்போது திரண்டிருந்த கட்சியினர் அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் முன்மொழிபவர்கள், வழிமொழிபவர்கள் என 20 மாவட்ட செயலாளர்கள் கையெழுத்திட்டனர்.

இதனிடையே பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்தார்.

EPS-OPS

இதனையடுத்து, வழக்கு இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், ஸ்ரீராம் ஆகியோர் வாதிட்டனர். அப்போது கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், தேர்தல் ஆணையம் இதுவரை இடைக்கால பொதுச் செயலாளராக யாரையும் அங்கீகரிக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.

மேலும் புதிய விதிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், புதிய விதிகளின் படி 5 ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகிகளாக இருப்பவர் தான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்றால் கட்சியின் அடிப்படை தொண்டர் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். இது எம்.ஜி.ஆர் கொள்கைக்கு எதிராக உள்ளது என்றும் வாதிடப்பட்டது. மேலும் 1.5 கோடி தொண்டர்கள் உள்ளனர், ஆனால் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை என்ற வாதமும் வைக்கப்பட்டது.

High-Court

தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. மேலும் எதிர் தரப்பிற்கு பதிலளிக்க உத்தரவிட வேண்டும் எனவும், இல்லையென்றால் ஒருவரே வேட்புமனு தாக்கல் செய்து, அவரையே ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து விடுவார்கள் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது. இறுதியில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது, தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் எனவும், தேர்தல் முடிவுகளை மார்ச் 24-ம் தேதி வரை வெளியிட வேண்டாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு 22-ம் தேதி விசாரிக்கப்பட்டு 24-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

From around the web