அதிமுக கவுன்சிலர் வெட்டி கொலை.. வண்டலூர் அருகே பரபரப்பு!

 
ADMK

வண்டலூர் அருகே அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கல்யாணி. இவரது கணவர் ரவி ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார். இவர்களுக்கு அன்புராஜ், அன்பரசு மகன்கள் உள்ளனர். 2-வது மகனான அன்பரசு 9-வது வார்டு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில் அன்பரசு துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று வேங்கடமங்கலத்தில் இருந்து கீரப்பாக்கத்துக்கு சென்றார். நவீன்குமார் என்பவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் அன்பரசு பங்கேற்றார். பின்னர் அருகில் உள்ள சுடுகாட்டு பகுதிக்கு சென்ற அன்பரசு நேற்று இரவு நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

அப்போது இரவு 11 மணி இருக்கும். இந்த நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தது. அவர்கள் அன்பரசோடு இருந்தவர்களை விரட்டும் எண்ணத்தில் அங்கு நின்றிருந்த அன்பரசுவின் கார் கண்ணாடியை ஆயுதங்களால் தாக்கியும் வெண்குண்டுகளை வீசியும் உடைத்தனர். இதில் பலத்த சத்தத்துடன் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதையடுத்து ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த அன்பரசுவும் அவரது நண்பர்களும் உஷாராகி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 

murder

இருப்பினும் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் விடாமல் விரட்டிச் சென்றனர். அன்பரசுவுடன் வந்தவர்கள் தெறித்து ஓட்டம் பிடித்து விட்ட நிலையில், அன்பரசு மட்டும் சிக்கிக் கொண்டார். அப்போது அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அன்பரசுவின் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் விழுந்தன. கை, கால்கள், கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் அன்பரசு கீழே சரிந்தார். பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பலியானார். அன்பரசுவை வெட்டிக்கொன்ற கொலையாளிகள் தப்பி ஓடி தலைமறைவானார்கள்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்பரசுவின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன், மற்றும் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகள் யார்? எதற்காக அன்பரசு கொலை செய்யப்பட்டார்? என்பது பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

Kayar PS

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்பரசுக்கு கொலை மிரட்டல் வந்து உள்ளது. இதுதொடர்பாக தாழம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில்தான் அன்பரசு கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே கொலை மிரட்டல் விடுத்த கும்பலுக்கு கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அன்பரசுக்கு வேறு யாரும் எதிரிகள் உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளனர்.

இதற்கிடையே அன்பரசு கொலை செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் ரத்னமங்கலம் சந்திப்பில் 'திடீர்' சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாழம்பூர் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

From around the web