கடைசி நேர திருப்பத்திற்காக காத்திருக்கும் அதிமுக தொண்டர்கள்!! இது நடக்குமா.. சாத்தியம் தானா?

 
EPS

பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்த நாள் முதல் அதிமுகவின் கடைசிகட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆர்வம் வெகுவாகக் குறைந்துள்ளது. அதிமுக தொண்டர்களை யாரும் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது. சரியான அரசியல் புரிதல்களும் தேர்தல் சூட்சமங்களும் திமுகவினருடன் போட்டி போடும் அளவுக்கு தெளிவான சிந்தனை கொண்டவர்கள் தான்.

பத்து தோல்வி பழனிச்சாமி என்று பெயர் பெற்றதன் காரணமே அதிமுக தொண்டர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது தான். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என தைரியமான முடிவெடுக்கும் தலைவர்களைப் பார்த்த தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் பம்மும் அரசியல் பிடிக்கவில்லை. தங்கள் தலைவர் தைரியமானவராக இருக்க வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்களின் முதல் எதிர்ப்பார்ப்பு.

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்த போது உண்மையிலேயே அதிமுக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். அதன் தொடர்ச்சியாக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அதிகரித்ததை, அவர் பங்கேற்ற கூட்டங்களிலேயே காணமுடிந்தது.

இப்போது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பதையே ஏற்றுக் கொள்ள முடியாத தொண்டர்களுக்கு, அமித் ஷாவின் கூட்டணி ஆட்சி என்பது கொஞ்சம் கூட ஏற்புடையதாக இல்லை. பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதை விட எதிர்க்கட்சியாக இருந்து கொள்வது மேல் என அதிமுகவின்  கடைசித் தொண்டன் கூட சொல்வதைக் கேட்க முடிகிறது.

மேலும் ஆட்சியில் பங்கு என்பது கட்சியை ஒழிக்கும் முதல் திட்டம் என்பதையும் இந்தத் தொண்டர்கள் முழுமையாக உணர்ந்துள்ளனர். அண்டை மாநிலங்கள் வட மாநிலங்களில் பாஜகவின் சித்து விளையாட்டுகளை இவர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்கள்.

தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு  கூட்டணியில் மாற்றம் இருக்கும். பாஜகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிடுவார் எடப்பாடி பழனிசாமி என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் தொண்டர்கள். தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு அமலாக்கத்துறை, ரெய்டு, கைது என் ஏதாவது நடந்தால் அது அதிமுகவுக்குத் தான் சாதமாகும் என்பதால் அத்தகைய நடவடிக்கைகள் இருக்காது. அதனால் தான் தேர்தல் வரையிலும் பொறுத்துக் கொண்டே இருப்பார் எடப்பாடி பழனிசாமி என்று தொண்டர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இது சாத்தியம் தானா? எடப்பாடி பழனிசாமி இத்தகைய தைரியமான முடிவை எடுத்து தொண்டர்களின் அன்பைப் பெறுவாரா? தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதெல்லாம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் தெரியும். அது வரையிலும் நம்பிக்கையே வாழ்க்கை என்று அதிமுக தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- ஸ்கார்ப்பியன்

From around the web