தமிழ்நாட்டில் பொங்கலுக்கு பிறகு மழை? வானிலை மையம் விடுத்த அலெர்ட்!
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகியது. இதன் காரணமாக இன்றும் (ஜன. 14) நாளையும் (ஜன. 15) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் 18.01.2024 முதல் 20.01.2024 வரை தென் தமிழ்நாடு பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாட்டின் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று (ஜன. 14) வடமேற்கு பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.