தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

 
RTE
தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் வகுக்கப்பட்டு 12-11-2011 முதல் தமிழ்நாட்டில் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்ந்து பயில வழி வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து பள்ளிகளுக்கு வழங்கும்.

school

அந்த வகையில், 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஏப்ரல் 22) முதல் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (மே) 20-ம் தேதி ஆகும்.

விண்ணப்பப் பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், அந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN-Govt

காஞ்சிபுரத்தில் உள்ள 139 சிறுபான்மையற்ற பள்ளிகளில் 1,889 இடங்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரையில், எவ்வளவு பள்ளிகளில், எவ்வளவு இடங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்? என்பது இன்னும் உறுதியாகவில்லை என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.

From around the web