அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்து நடிகை கௌதமியா?

ரஜினிக்கு ஜோடியாக குருசிஷ்யன் படத்தில் அறிமுகமாகி, ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களுடனும் சரத்குமார்,ராமராஜன் உள்ளிட்ட முன்னணி தமிழ்நடிகர்களுடனும் தமிழ்த்திரையுலகில் கொடிகட்டிப் பறந்த கௌதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமலே பல வருடங்கள் ஒன்றாக வசித்து வந்தார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான கௌதமியின் மகளும் அவர்கள் உடனே இருந்தார். திடிரென்று கமல்ஹாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வந்தவர் பாஜகவில் சேர்ந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தார்.
முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டார் கௌதமி. அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவரான பிறகு பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராம் வெளியேறினார். அதைத் தொடர்ந்து கௌதமியும் பாஜகவிலிருந்து வெளியேறினார். ஒருவர் பின் ஒருவராக இருவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் சேர்ந்தனர்.
நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் உள்பட மேடை நிரம்பி வழியும் அளவுக்கு கட்சி நிர்வாகிகள் இடம் பிடித்து இருந்தனர். அவர்களில் நடிகை கௌதமியும் முக்கியமானவராக மேடையில் நடுவில் அமர்ந்து இருந்தார். எடப்பாடி பழனிசாமி பேசும் போது அவருக்கு இடப்புறம் கௌதமி தான் இருந்தார். தொலைக்காட்சியில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது அவருடன் கௌதமியும் சேர்ந்தே காணொலியில் தொடர்ந்து தெரிந்து கொண்டே இருந்தார்.
திட்டமிட்டு கௌதமிக்கு மேடையின் நடுவில், எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் இருக்கை ஒதுக்கப்பட்டதா அல்லது எதேச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால் ரத்தத்தின் ரத்தங்கள் புரட்சித் தலைவருக்கு ஒரு புரட்சித் தலைவி என்றால் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழச்சி கௌதமி என்று உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் கௌதமி தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.