தமிழ்ப் புத்தாண்டை தவிர்த்த நடிகர் விஜய்.. முதலமைச்சர் ஸ்டாலின் வழியா?

 
Bharathidasan Bharathidasan

தமிழர்களின் புத்தாண்டு சித்திரை 1ம் தேதியா? தை 1ம் தேதியா? என்ற கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. 60 ஆண்டுகள் என்று சொல்லப்படும் தமிழ் ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூட தமிழ் மொழியில் இல்லாமல் சமஸ்கிருத மொழியில் இருப்பது சாதாரண மக்களுக்குக் கூட கேள்வியை எழுப்புகிறது. 

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியத்தில் தமிழ் மாதங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படும் பெயர்கள் ஒன்று கூட சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தை மாதம் 1ம் தேதி தான் என்று தமிழறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஒரு புதிய முடிவுக்கு வந்தார்கள். தமிழறிஞர் மறைமலை யடிகள் தலைமையில் அக்கூட்டம் நடந்தது. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது அதையே தமிழ் ஆண்டு எனக் கடைப்பிடிப்பது,  திருவள்ளுவர் காலம் கி.மு. 31, தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்யப் பட்டது

”நித்திரையில் இருக்கும் தமிழா !
சித்திரையல்ல உனக்கு தமிழ் புத்தாண்டு !

அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

என்று புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதி தாசனும் தன்னுடைய வரிகளில் எடுத்துச் சொன்னார். தமிழறிஞரிகளின் தொடர் முயற்சியினால் 2008ம்  ஆண்டு, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார் அன்றைய முதலமைச்சர் கலைஞர். வழக்கம் போல் திமுக ஆட்சி முடிவுகளை மாற்றியும் கிடப்பிலும் போட்டு வந்த அதிமுக, 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சித்திரை 1 க்கு மாற்றினார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. 

மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக 2021ல் ஆட்சியைப் பிடித்தாலும், இன்று வரையிலும் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தை1ம் தேதியில் தமிழர் திருநாள் தைப் பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள் என்றே குறிப்பிட்டு வாழ்த்தி வருகிறார். சித்திரை1ம் தேதி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிப்பதில்லை.

ஆனால் அதிமுக தலைவர்கள் சித்திரை 1ம் தேதியன்று தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் “ அனைவருக்கும் இனிய  சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  முதலமைச்சர் ஸ்டாலின் வழியில், சித்திரை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு இல்லை என்று மறைமுகமாகக் கூறியுள்ளார் நடிகர் விஜய்.


 

From around the web