நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருது.. தொல் திருமாவளவன் அறிவிப்பு!!

 
Thirumavalavan Sathyaraj Thirumavalavan Sathyaraj

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் குறித்த அறிவிப்பை தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

”விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைவாய்ந்த சான்றோருக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். 2022ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி” விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

முத்தமிழறிஞர் சமத்துவப் பெரியார் கலைஞர், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் மாண்புமிகு சித்தாராமையா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததிராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவரிசையில் 2025ம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை திராவிடப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கே.எஸ்.சலம் அவர்களுக்கும், பெரியார் ஒளி விருதினை திரைப்படக் கலைஞரும், சுயமரியாதைக் கொள்கைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான திரு.சத்தியராஜ் அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு:

அம்பேத்கர் சுடர் - முனைவர் திரு.கே.எஸ்.சலம் மேனாள் துணைவேந்தர், திராவிடப் பல்கலைக் கழகம், ஆந்திரா

பெரியார் ஒளி - திரு.சத்யராஜ் திரைப்படக் கலைஞர்

மார்க்ஸ் மாமணி - திரு.தியாகு பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்,

காமராசர் கதிர் - திரு.வெ.வைத்திலிங்கம் எம்.பி மேனாள் முதலமைச்சர், புதுச்சேரி

அயோத்திதாசர் ஆதவன் - முனைவர் பா.ஜம்புலிங்கம் பௌத்த ஆய்வறிஞர்

காயிதேமில்லத் பிறை - திரு.பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாக்கவி தலைவர், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை

செம்மொழி ஞாயிறு - பேராசிரியர் அ.சண்முகதாஸ் தமிழறிஞர், யாழ்ப்பாணம்”

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் அறிக்கையில் கூறியுள்ளார்

From around the web