நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது.. விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

 
Prakashraj

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர் விருது’ வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான விருதுகள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த   சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

Prakash-Raj

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க  தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு  ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

அந்தவரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை திரைப்படக் கலைஞரும் மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும், பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.


விருதுகள் பெறுவோரின் விவரம் பின்வருமாறு:

அம்பேத்கர் சுடர்: பிரகாஷ்ராஜ், திரைப்படக் கலைஞர் 

பெரியார் ஒளி: வழக்கறிஞர் அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் 

மார்க்ஸ் மாமணி: இரா. முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

காமராசர் கதிர்: பேராயர் எஸ்றா சற்குணம். தலைவர், இந்திய சமூக நீதி இயக்கம் 

அயோத்திதாசர் ஆதவன்: பேராசிரியர் ராஜ்கௌதமன்

காயிதேமில்லத் பிறை: எஸ்.என். சிக்கந்தர், மேனாள் மாநிலத் தலைவர், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா

செம்மொழி ஞாயிறு: எ.சுப்பராயலு, கல்வெட்டியலறிஞர்

விசிக விருதுகள் வழங்கும் விழா (25.05.2024) அன்று சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

From around the web