வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை.. சென்னை காவல்துறை எச்சரிக்கை

 
Stickers

தனிநபர்கள் தங்கள் வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, ராணுவம் என துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை ஒட்ட சென்னை போக்குவரத்து காவல் துறை தடை விதித்துள்ளது.

வாகன ஓட்டிகள் பெரும்பாலாலும் தங்களது வாகனத்தில் ஏதாவது ஒரு ஸ்டிக்கர்கள் ஒட்டி வைத்திருப்பார்கள். இதில் குறிப்பாக, மீடியாவில் வேலை செய்பவராக இருந்தால், பிரஸ் என்றும், காவல்துறையில் வேலை செய்பவர்கள் போலீஸ் என்றும், வழக்கறிர்கள் மற்றும் மருத்துவர்கள் அவர்களின் முத்திரைகளை தங்களது வாகனத்தில் ஒட்டி வைத்திருப்பார்கள். இந்த ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதனால் வரும் மே 2-ம் தேதி முதல் வானங்களில் இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

Stickers

இது குறித்து சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியி்டுள்ள அறிவிப்பில், தனியார் வாகனங்களில் நம்பர் ப்ளேட்டில் ஸ்டிக்கர்கள், மற்றும் வேறு ஏதேனும் சின்னங்கள், குறியீடுகள், தங்கள் பணி தொடர்பான அடையாளங்களை வெளிப்படுத்துவது தனி நபர்களுக்கும் அவர் சார்ந்த துறைக்கும் ஏதாவது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பெரும்பாலும், சென்னை பெருநகரில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல் துறை உட்பட முப்படை போன்ற துறைகள்/நிறுவனங்களின் பெயர்களைக் காணலாம். இது போன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும், வேறு பகுதியிலும் காணப்படும். இத்தகைய அரசாங்கத் தொடர்புடைய சின்னங்கள்/ எழுத்துக்களை தனியார் வாகனங்களில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது. கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.


இது தவிர, பல தனியார் வாகனங்களில் ஒரு சில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வக்கீல் என வெளிப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை இந்த நடைமுறைகளுக்கு எதிராக சாலையைப் பயன்படுத்துபவர்களை எச்சரித்தும், இம்முரண்பாட்டினை தங்களது வாகனத்தில் சரிசெய்ய 01.05.2024 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

மேலும் இவ்விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வருகின்ற 02.05.2024 முதல். MV சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் (மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறுயீடு) பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் மற்றும் வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் MV விதி 50 u/s 177-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web