ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம்! இனி பொருட்களை ஈஸியா வாங்கலாம்.. எப்படி தெரியுமா?

 
Ration

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களுக்கு செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும்  ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள 39 மாவட்டங்களில் 248 கிடங்குகள் இருக்கின்றன. இதிலிருந்து 34,792 ரேசன் கடைகளுக்கு பொருட்கள் பிரித்து விநியோகிக்கப்படுகிறது. அதேபோல உணவு பொருட்களுடன் சேர்த்து மண்ணெண்ணெய்யும் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பேர் பயனடைகிறார்கள்.

Ration

இந்நிலையில் தமிழ்நாடு அரசு அவ்வப்போது சில புதிய திட்டங்களையும் அறிவித்து வருகிறது. சமீபத்தில் கூட ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சோதனை முயற்சியாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்படும். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற மாவட்டங்களில் விநியோகிக்கப்படும்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள M.VM.P ரேஷன் கடையில் கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் நடைமுறையை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்தார். இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 602 ரேஷன் கடைகள், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், 7 நகர கூட்டுறவு சங்கம், 10 மருந்தகங்கள் என கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் கியூஆர் கோடு மூலமாக பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

QR-Code

இந்த நிலையில், அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 683 நியாய விலைக் கடைகளிலும் (QR Code) குறியீடு மூலம் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கோவை, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, மதுரை, சென்னை, வேலூர், உள்ளிட்ட 12 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் இன்னும் ஒரு வாரத்தில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இம்மாத இறுதிக்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web