நாளை முதல் ரூ.10-க்கு ஆவின் டிலைட் பால் பாக்கெட்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

 
Aavin

நாளை முதல் ஆவின் டிலைட் 200 மி.லி. பாக்கெட் அறிமுகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சார்பாக நாள்தோறும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆவின் நிறுவனத்தில் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் மெஜந்தா நிறத்திலும், சமன்படுத்தப்பட்ட பால் நீல நிறத்திலும், நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிறத்திலும், கொழுப்புச் சத்து நிறைந்த பால் ஆரஞ்சு நிறத்திலும், டீ மேட் - கொழுப்புச் சத்து நிறைந்த பால் சிவப்பு நிறத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோர் விலை குறைவாக உள்ள ஊதா, பச்சை நிற பால் பாக்கெட்டுகளையே வாங்குகின்றனர்.

Aavin

இந்த நிலையில் ஆவின் டிலைட் 200 மி.லி. பாக்கெட் நாளை (டிசம்பர் 1) முதல் அறிமுகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  நாளொன்றுக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பால் உபபொருட்களை சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், மெஜெந்தா நிற கவர்களிலும், சமன்படுத்தப்பட்ட பால், நீல நிற கவர்களிலும், நிலைப்படுத்தப்பட்ட பால், பச்சை நிற கவர்களிலும்,  நிறை கொழுப்பு பால், ஆரஞ்சு நிற கவர்களிலும் விற்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த  மே 9 ஆம் தேதி சென்னையில் விட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட 500 மில்லி ஆவின் டிலைட் பால் அறிமுகம் செய்யப்பட்டதாகவும், இந்த ஊதா நிற பால் பாக்கெட் (3.5%Far & 8.5% SNF) பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

aavin

இதனைத்தொடர்ந்து, ஆவின் 500 மில்லி டிலைட் பால் ரூ. 21 விலையில் நாளை (டிசம்பர் 1) முதல் அனைத்து வட்டார அலுவலகங்கள், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ.10-க்கு 200 மி.லி. ஆவின் டிலைட் பால் நாளை (டிசம்பர் 1) முதல் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

From around the web