காளியம்மாளை கன்ஃபூஸ் பண்ணும் ஆதவ் அர்ஜுனா?

 
Kaaliyammal

ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நாம் தமிழர் கட்சியில் இணைந்த காளியம்மாள் அவருடைய எளிமையான தோற்றம் மற்றும் அனல் பறக்கும் பேச்சாற்றலால் தமிழ்நாடு முழுவதும் வெகு விரைவாக அறிமுகம் ஆகிவிட்டார். நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆனால் நாம் தமிழர் கட்சியில் மற்றவர்கள் வளர்வதை அவ்வளவாக ரசிக்காத சீமான், காளியம்மாளை மட்டம் தட்ட ஆரம்பித்தார். பிசிறு என்று அருவருக்கத்தக்க வார்த்தையால் அர்ச்சித்தார். அதையெல்லாம் கடந்து கட்சியில் நீடித்து வந்த காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

காளியம்மாள் அடுத்து எந்தக் கட்சியில் சேரப்போகிறார் என்பது தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பான செய்தி ஆகிவிட்டது. நாகப்பட்டினத்தைச் சார்ந்த காளியம்மாள் திருச்செந்தூருக்கு தெற்கே உள்ள மணப்பாடு பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சமூக செயற்பாட்டாளர் என்ற அடையாளத்தோடு மேடை ஏறிய பிறகே அவர் கட்சி மாறப்போகிறார் என்ற தகவல் வெளியே வந்தது.

அதுவும் ஆளுங்கட்சி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் ஒரே மேடையில் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை கனிமொழி எம்.பி யின் கண்ணசைவு இல்லாமல் ஒரு வார்டு கூட்டம் கூட நடைபெறாது. மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களுடைய அன்றாட நிகழ்ச்சிகளும் கனிமொழி எம்.பி யின் பார்வைக்குப் பிறகே நடந்து வருகிறது.

இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனுடன் காளியம்மாள் மேடையேறப்போவது கனிமொழி எம்.பி க்கு தெரிந்தே நடந்துள்ளது. திமுகவில் இணைவதற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் முடிவு செய்த பிறகே அமைச்சருடன் மேடையேற அனுமதியும் கிடைத்துள்ளது. திமுக மகளிரணியில் மாநில அளவிலான பொறுப்பு, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்ற இரண்டு உறுதிமொழிகளுடன் தான் திமுகவுக்கு வருகிறார் காளியம்மாள்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து ஆண்கள் பெருவாரியாக திமுகவில் சேர்ந்திருந்தாலும் பெண்கள் அதிகளவில் இதுவரையிலும் சேரவில்லை. பெரும் பெண்கள் படையை நாம்தமிழர் கட்சியிலிருந்து திமுகவுக்கு இழுத்து வருவதே காளியம்மாளுக்கான அசைன்மெண்ட். இதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்ப்பதால் தான் காளியம்மாள் திமுகவில் இணைவதற்கான தாமதம். நாகை மாவட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் என்பதால் அவர் தான் திமுக தரப்பு தொடர்பாளராக செயல்படுகிறார். 

இடையில் ஆதவ் அர்ஜுனா தவெக வில் சேர அழைத்ததாகவும் இல்லையென்றால் தனிக்கட்சி தொடங்குங்கள் என்று சொன்னதாகவும் வரும் தகவல்களில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் காளியம்மாள் திமுகவுக்கு செல்ல விடாமல் ஆதவ் அர்ஜுனா முயற்சி எடுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

From around the web