தந்தையைக் கொலை செய்த இளைஞர்.. 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்கெட்ச் போட்டுக் கொன்ற மகன்!

 
Chennai

சென்னையில் தந்தையைக் கொலை செய்த நபரை 22 ஆண்டுகள் கழித்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எருக்கஞ்சேரி, நேரு நகரைச் சேர்ந்தவர் செய்யா ( எ) செழியன் (59). இவர் வடபெரும்பாக்கம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து நேற்றிரவு பைக்கில் வீட்டுக்குத் திரும்பிச் கொண்டிருந்தார். மாதவரம் சின்ன ரவுண்டானா பகுதியில் செழியன் வந்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு கும்பல், செழியனை வழிமறித்துச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய செழியனை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனிக்காமல் செழியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துத் தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

Murder

இது குறித்து செங்குன்றம் போலீசார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட செழியன், ஒருகாலத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர். 2001-ம் ஆண்டு பிரபாகரன் என்பவரைக் கொலைசெய்த வழக்கில், செழியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு பிரபாகரனின் தம்பி பாபு என்பவரின் கொலை வழக்கிலும் செழியன் கைதானார்.

இந்த வழக்கில் சிறைக்குச் சென்ற செழியன், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியில் வந்தார். இதையடுத்து கொடுங்கையூரில் இருந்து இருப்பிடத்தை மாற்றிய செழியன், வடபெரும்பாக்கம் பகுதியில் வேலை பார்த்து வந்தார். ஆனால், பிரபாகரனின் மகன் சதீஷ்குமார், தன்னுடைய தந்தையின் கொலைக்குக் காரணமான செழியனைக் கொலை செய்ய திட்டமிட்டார்.

Red Hills PS

பின்னர் கொளத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த விஷால், அப்பு, மகேஷ் உட்பட சிலரை அழைத்துக் கொண்டு செழியனை பைக்கில், பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். அப்போது மழை பெய்ததால் செழியன் பைக்கை நிறுத்திவிட்டு ஓரமாக நின்றபோது, சதீஷ்குமார் தலைமையிலான டீம் அவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறது.

இந்த வழக்கில் சதீஷ்குமார் உட்பட நான்கு பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர். 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபாகரன் கொலைக்குப் பழிக்குப் பழியாக, திருந்தி வாழ்ந்த முன்னாள் ரவுடி செழியன் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

From around the web