குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை.. 21 வயது வரை மாதம் ரூ.10 ஆயிரம்.. தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

 
Baby

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் குழந்தைக்கு 21 வயது நிறைவடையும் வரை மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் ராக்கு. இவரது கணவர் காசி விஸ்வநாதன். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், ராக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட நிலையில் மீண்டும் கருத்தரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராக்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், எனக்கும் காசி விஸ்வநாதன் என்பவருக்கும் கடந்த 2007-ல் திருமணம் நடைபெற்றது. 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், நான் கடந்த 2014-இல் விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டேன். ஆனால், எனக்கு முறையான குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளாததால், மீண்டும் கருத்தரித்தேன். எனது குடும்ப பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, குழந்தையை கருவில் கலைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்தேன். 

Compensation

அப்போது குழந்தையின் கருவைக் கலைக்க வேண்டாம். பிறக்கும் குழந்தையை பராமரிக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எனக்கு பல்வேறு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டதால், மீண்டும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றேடுத்தேன். தற்போது, குழந்தையை வளா்க்க சிரமப்பட்டு வருகிறேன். எனவே, குழந்தையை பராமரிக்க உதவுவதுடன், எனக்கு அரசு சாா்பில் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அண்மையில் பிறப்பித்த உத்தரவில், ஏற்கெனவே இது போன்ற இரு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மனுதாரருக்கும் பொருந்தும். எனவே, அவருக்கு அரசு சாா்பில் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே மனுதாரருக்கு அரசாணைப்படி ரூ.30 ஆயிரம் வழங்கியிருப்பதால், இழப்பீட்டு தொகை ரூ. 2.70 லட்சம் வழங்க வேண்டும்.

Madurai High Court

5-வது ஆகப் பிறந்த குழந்தை இலவசக் கல்வி பெறும் வகையில் (அரசு, தனியாா் பள்ளிகளில்) அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்ய வேண்டும். அந்தக் குழந்தைக்கு 21 வயது நிறைவடையும் வரை ஆண்டுக்கு தலா ரூ.1.20 லட்சத்தை (மாதம் ரூ.10 ஆயிரம்) அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதி கூறி வழக்கை முடித்து வைத்தார்.

From around the web