வயிறு வலியோடு வந்த பெண் நோயாளி.. அலைக்கழிக்க வைத்த மருத்துவர்.. வைரல் வீடியோ!

 
Ambur

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளியிடம் பணியில் இருந்த மருத்துவர் அடாவடியாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுண்ணாம்புகாளை பகுதியைச் சேர்ந்தவர் சபீர் அகமது. இவரது மனைவி மொகரம். இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்படவே ஆம்பூரில் உள்ள தேசிய அளவில் தரம் வாய்ந்த அரசு மருத்துவமனைக்கு இரவு 11 மணிக்கு சிகிச்சைக்காக உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என கூறப்படுகிறது. இதனால் வலியால் துடித்த மொகரத்திற்கு மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஊசி செலுத்தி காத்திருக்கும் படி கூறியுள்ளார்.

இருப்பினும் வயிற்று வலி அதிகமானதால் அப்பெண்ணின் உறவினர்கள் உடனடியாக அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். அப்போது மருத்துவர் கார்த்திகேயன் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வைத்து அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவரிடம் கேள்வி எழுப்பிய போது, இங்கு இப்படித்தான் நான் ஒரு எலும்பு மருத்துவர், என்னால் இதற்கெல்லாம் சிகிச்சை அளிக்க முடியாது என சாவகாசமாக கூறியதாகத் தெரிகிறது.

Ambur GH

பின் ஆத்திரமடைந்த அவர், எதையாவது ஒரு ஊசியை குத்தி இவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள் எனக் கூறியதாகக் சொல்லப்படுகிறது. வலி அதிகமாக இருந்தால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறியதும் பெண்ணின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்துள்ளனர். ஒரு காய்கறி கடை சரியில்லை என்றால் அருகாமையில் உள்ள காய்கறிக்கு கடைக்கு சென்று காய்கறிகளை வாங்குவதில்லையா? அதேபோலத்தான் இந்த மருத்துவமனையில் இப்போது மருத்துவர் இல்லை, நீங்கள் வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என மருத்துவர் கூறியதாக சொல்லப்படுகிறது.

வாயில் ஸ்விங்கம் மென்றபடி மருத்துவரின் பொறுப்பற்ற இந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிகிச்சைக்காக வந்த பெண் கூறும் போது, அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் மருத்துவ உதவியாளர் சிகிச்சை அளிப்பதும் வேதனைக்குரியது எனக் குறிப்பிட்டார். மேலும் அரசு மருத்துவமனையை, காய்கறி கடையுடன் ஒப்பிட்டு ஏளனத்துடன் பேசிய மருதுதவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.


பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து மருத்துவர் அளித்த விளக்கத்தில், 2 ஊசிகள் செலுத்திய போதும் பெண்ணுக்கு வலி சரியாகாத நிலையில் ஸ்கேன் எடுப்பதற்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்தவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அதை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் உறவினர்களை வரவழைத்து தகராறில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார். தேசிய தரம் வாய்ந்தது என்ற பெயர் பலகையுடன் உள்ள மருத்துவமனையில், அவசரத்திற்கு சிகிச்சைக்கு சென்ற பெண் வலியுடன் அழைக்கழிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையாகி உள்ளது.

From around the web