அதிகாலையில் நடந்த கோர விபத்து.. நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து.. 4 பேர் பலி!

 
Chengalpet Chengalpet

மதுராந்தகத்தில் பழுதாகி நின்ற லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு  மாவட்டம் மதுராந்தகத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது. விழுப்புரத்தில் இருந்து  சென்னை பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

Accident

அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த இந்த ஆம்னி பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது  மோதியது.  இதில் ஆம்னி பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியது.  இந்த கோர விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த மேல்மருவத்தூர் சேர்ந்த மருத்துவர் ராஜேஷ், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தனலட்சுமி, பிரவீன் மற்றும் அடையாளம் காணப்படாத ஒரு பெண் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதற்கிடையே, விபத்தில் சிக்கிய ஆம்னி பேருந்து மீது முசிறியில் இருந்து சென்னைக்கு வந்த அரசு விரைவு பேருந்து ஒன்று மோதியது.  இந்த விபத்துக்களில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  கிட்டதட்ட 3 மணி நேரத்திற்கு பிறகே விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.  திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web