துணிவு பட பாணியில் வங்கிக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மாணவர்.. திருப்பூரில் பரபரப்பு சம்பவம்!

 
Tiruppur

துணிவு பட பாணியில் பொம்மை துப்பாக்கி மற்றும் பொம்மை டைம்பாம் வைத்து வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மாணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியில்  தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று முதல் சனிக்கிழமை என்பதால் வங்கி வழக்கம்போல் இயங்கியதுடன் ஏராளமானோர் பணம் செலுத்தவும், எடுக்கவும் குவிந்திருந்தனர். அப்போது வங்கிக்குள் உடலில் பர்தா முகத்தில் முகமூடி அணிந்த  நபர் ஒருவர் நுழைந்து தன்னிடம்  துப்பாக்கி மற்றும் டைம் பாம் இருப்பதாக காண்பித்து வங்கியில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். 

Robbery

அப்போது வங்கிக்குள் ஏராளமானோர் இருந்ததால் இளைஞரை தலையின் பின்புறம் தாக்கி மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் சோதனை செய்ததில் அவரிடமிருந்த துப்பாக்கி பொம்மை என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த டைம் பாமும் பொம்மை என்று உறுதி செய்தனர். இதனையடுத்து வங்கி ஊழியர்கள் அலங்கியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பர்தா அணிந்திருந்த இளைஞரை  பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அலங்கியம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (19) என்பதும், பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு பயின்று வருவதும் தெரியவந்தது. மேலும், இவர் பயன்படுத்திய பர்தா, முகமூடி, பொம்மை துப்பாக்கி, கத்தி உள்ளிட்டவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியதும் தெரியவந்தது. இவருக்கு உடந்தையாக வேறு நபர்கள் உள்ளனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Alangiyam PS

மேலும் பொதுமக்கள் தாக்கியதில் தலையில் காயமடைந்த சுரேஷை அலங்கியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று (தலையில் 3 தையல்) முதலுதவி சிகிச்சை செய்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் டி.எஸ்.பி தனராசு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அஜித்தின் துணிவு பட பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web