செங்கம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 7 பேர் பலி!
செங்கம் அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள அந்தனூர் பகுதியில் திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று (அக். 23) இரவு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த டிஐஜி முத்துசாமி, ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும், செங்கம் உட்கோட்ட போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் 11 பேர் பயணம் செய்துள்ளனர்.
விபத்தில், உயிரிழந்தவர்கள் 5 பேரின் விவரம் பின் வருமாறு, கிருஷ்ணகிரி மாவட்டம் கேளமங்கலத்தை சேர்ந்த புனித்குமார், ஊத்தங்கரை, மாரப்பட்டியை சேர்ந்த காமராஜ், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் கோரோ, பிஷேஸ் மூர்மு, சீமோன் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த இருவரின் அடையாளம் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே பகுதியில் கடந்த வாரம் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த லாரி மீது மேல்மலையனூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, புதுப்பேட்டை கூட்டு சாலை பகுதியில் விபத்துகளை தடுக்க, வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வேக தடுப்புகள் அமைக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.