மரக்கிளை முறிந்து விழுந்து பள்ளி மாணவி பலி... சுருளி அருவிக்கு சுற்றுலா வந்தபோது பரிதாபம்!!

 
Femina

கம்பம் அருகே சுருளி அருவிக்கு சுற்றுலா வந்தபோது, மரக்கிளை முறிந்து விழுந்து பள்ளி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரில் வசித்து வருபவர் நிக்ஸன் (47). கார் ஓட்டுநரான இவருக்கு கிருஷ்ணமாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் உள்ளனர். பெமினா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நிக்ஸன் தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவு செய்தார். 

அதன்படி அவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் 2 பேருடன் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு காரில் நேற்று சுற்றுலா வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் அருவியியை சுற்றியுள்ள இடங்களை கண்டு களித்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் ஆனந்தமாய் குளித்தனர்.

Dead-body

இதைத் தொடர்ந்து பெமினா உள்பட 6 பேரும் அருவியில் இருந்து, கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். வென்னியாறு பாலம் அருகே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த மரத்தில் இருந்த பெரிய கிளை ஒன்று, திடீரென முறிந்து பெமினாவின் தலையில் விழுந்தது. இதில் தலையில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட சம்பவ இடத்திலேயே பெமினா பரிதாபமாக இறந்தார். 

தங்களுடன் நடந்து வந்த பெமினா தங்களது கண்எதிரே, கண்இமைக்கும் நேரத்தில் மரக்கிளை விழுந்து உயிரை விட்ட சம்பவம் அவரது பெற்றோா் மற்றும் உறவினர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பெமினாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.

Royappanpatti PS

இதுகுறித்து தகவல் அறிந்த ரேஞ்சர் பிச்சைமணி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பெமினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுருளி அருவிக்கு சுற்றுலா வந்தபோது மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மாணவியின் பெற்றோர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்தனர். பின்னர் சென்னை கும்மிடிபூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் குடியிருந்த அவர்கள், தங்களது பிள்ளைகளின் படிப்பு மற்றும் வேலையின் காரணமாக சென்னை நீலாங்கரையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web