கண்மாயில் சிக்கிய 9-ம் வகுப்பு பள்ளி மாணவி.. காப்பாற்ற குதித்த இளம்பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்!
தூத்துக்குடி அருகே, 9-ம் வகுப்பு பள்ளி மாணவி உட்பட இரு இளம் பெண்கள் கண்மாயில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மேலமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் கலைச்செல்வி (19). இவர், தனியார் பாலிபேக் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் அழகர் மகள் மேனகாதேவி (14), குளத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகள் கனிச்செல்வி (19). இவர்கள் மூவரும் அங்குள்ள கண்மாயில் குளிக்க சென்றனர்.
அப்போது, கண்மாயின் ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருந்த மாணவி, திடீரென நீரினுள் மூழ்கி தத்தளித்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண்கள் இருவரும் மாணவியை காப்பாற்ற சென்ற நிலையில், மாணவி மேனகா மற்றும் கலைச்செல்வி ஆகிய இருவரும் நீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பெண்களின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கல்லூரி மாணவி கனிச்செல்வியை போராடி பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, கனிச்செல்வி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.