திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் ஆம்னி பேருந்து.. 8 பேர் காயம்.. மேட்டூர் அருகே பரபரப்பு

 
Mettur

கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மேட்டூர் அடுத்த புது சாம்பள்ளி பகுதியை கடக்கும் பொழுது திடீரென அந்த பேருந்தில் முன் பகுதியில் கரும்புகை வெளியாகியுள்ளது.

Mettur

இதனை கண்ட ஓட்டுநர் சாலையிலேயே பேருந்தை நிறுத்தி பயணிகளை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தார். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேகமாக கீழே இறங்க தொடங்கினர். அப்போது பேருந்து முழுவதும் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உடனடியாக கருமலை கூடல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பேருந்தும் முழுவதும் எரிந்து எலும்பு கூடாய் காட்சி அளித்தது. மேலும் இந்த தீ விபத்தில் 5 ஆண்கள், மூன்று பெண்கள் என மொத்தம் 8 பேர் லேசான காயம் அடைந்தனர்.

Mettur

காயம் அடைந்த அனைவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்தில் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையானது. இந்த விபத்து குறித்து கருமலை கூடல் போலீசார் வாக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

From around the web