சடலத்துடன் ஒரு வாரம் வாழ்ந்த தாய், மகன்... உணவுக்கு வழியில்லாமல் இறந்த கொடூரம்!

 
Erode

ஈரோடு அருகே உணவுக்கு கூட வழியில்லாத நிலையில் இறந்து போன கணவன் மற்றும் தாயார் சடலங்களை ஒரு வாரம் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்த தம்பதி நடராஜன் - கனகாம்பாள். இந்த தம்பதியினர் மகள் சாந்தி (60). சாந்தி, திருமணத்துக்கு பின்னும் கணவர் மோகனசுந்தரம், மகன் சரவணக்குமார் (34), மகள் சசிரேகா ஆகியோருடன் தாய் கனகாம்பாள் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகள் சசிரேகாவிற்கு திருமணமாகி, அவர் மட்டும் காங்கேயத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் திருமணமாகி சென்ற பிறகு சாந்தி, தனது வயதான தாயார், கணவர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மகனுடன் வசித்து வந்தார். பல நாட்கள் பட்டினியாகவும், அக்கம் பக்கம் இருப்பவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டும் வாழ்ந்து வந்துள்ளனர்.

Erode

இந்த நிலையில் இன்று குமணன் வீதி பகுதியில் உள்ள சாந்தியின் வீட்டில், அதிக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாந்தியின் வீட்டின் முன்பு துர்நாற்றம் வீசியதால் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டினுள் சாந்தியின் அம்மா கனகாம்பாள் மற்றும் அவரது கணவர் மோகனசுந்தரம் ஆகிய இரண்டு பேரும் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தொடர்ந்து வீட்டினுள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த இரண்டு பேரின் உடலை மீட்ட போலீசார், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாததால் தான், வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததாக பரிதாபமாக சாந்தி தெரிவித்துள்ளார். மேலும் கணவர் இறந்து 7 நாட்கள் ஆனதாகவும், அம்மா இறந்து இரண்டு நாட்கள் ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Erode

அதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை போலீசார் தங்கள் சொந்த செலவில் நல்லடக்கம் செய்வதாக தெரிவித்துள்ளனர். பணமில்லை எனக்கூறி பெண்ணொருவர் தன் அம்மாவையும் கணவரையும் அழுகிய நிலையில் வீட்டுக்குள் வைத்திருந்த சம்பவம், அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web