மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை.. குடும்பத் தலைவிகளுக்கு தனி ATM கார்டு விநியோகம்?

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இத்திட்டத்திற்கான, முதற்கட்ட முகாம்கள் ஜுலை 24 முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இதன் தொடர்ச்சியாக வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் மாதம் 18,19,20 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் 1.66 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த பெண்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுதியான விண்ணப்பதாரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்து வருகின்றனர்.
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளின் வங்குக் கணக்கிற்கு ரூ.1,000 செலுத்தப்பட உள்ளது. வங்கிக் கணக்கு இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கணக்கு துவங்க தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் மூலம், அடிப்படை வங்கி சேவைகளை அணுக முடியாத குறைந்த வருவாய் பிரிவில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபே டெபிட் கார்டு (Rupay Debit card) கிடைக்க செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.