மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை.. தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
MKS

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்காக பெண்கள் விண்ணப்பிக்கும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தப் பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

1000

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. இந்த திட்டத்தில் சேர 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், தகுதி இல்லாத சுமார் 56.50 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

இந்த நிலையில், ஒரு கோடி குடும்பப்பெண்களுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான இன்று அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். 


இந்த திட்டத்தின்கீழ் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது. அதேவேளை, நேற்று முதலே பலரது வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. ஆனால், உடனடியாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை. இன்றுதான் அந்தப் பணத்தை எடுக்க முடியும். 

மேலும், நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆவண சரிபார்ப்பில் தகுதியான பயனாளியாக இருந்தால், அவர்களும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

From around the web