கலவை எந்திரம் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உடல் நசுங்கி பலி! திருவிடைமருதூர் அருகே சோகம்!!

 
Shanmugam

திருவிடைமருதூர் அருகே தடுப்பு சுவர் கட்டும் பணியின் போது கலவை எந்திரம் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மகாராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகையன். இவரது மகன் சண்முகம் (20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தாா். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவர் விடுமுறை நாளில் கட்டிடப் பணிகளுக்கு சென்று வருவது வழக்கம்.

Concrete

இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பழியஞ்சியநல்லூர் கீர்த்திமானாறு அருகில் மேல அகலங்கன் வாய்க்கால் சிமெண்ட் தடுப்பு சுவர் கட்டும்பணியில் சண்முகம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கனரக வாகனமான கான்கிரீட் கலவை எந்திரம் கான்கிரீட் கொட்ட வரும்போது நிலை தடுமாறி தடுப்பு சுவர் கட்டிட பணி செய்து கொண்டிருந்த இடத்தில் கவிழ்ந்தது.

இதில் எந்திரத்துக்கு இடையில் சிக்கிய சண்முகம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 கிரேன்கள், ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி கவிழ்ந்த கனரக வாகனத்தை அப்புறப்படுத்தி சண்முகத்தின் உடலை மீட்டனர். 

Thiruvidaimaruthur PS

தொடர்ந்து உயிரிழந்த சண்முகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டது. விடுமுறை நாளில் வேலை பார்த்து குடும்பத்துக்கு உதவ நினைத்த கல்லூரி மாணவரின் பரிதாப சாவு அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

From around the web