நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியது.. 3 பேர் உடல் நசுங்கி பலி... ஸ்ரீரங்கத்தில் பயங்கரம்!!

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலை கீதாபுரம் அருகே சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் யாசகர்கள் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் மாம்பழச்சாலையில் அம்மா மண்டபம் அமைந்துள்ளது.
காவிரி கரையில் அமைந்துள்ள இந்த மண்டபத்தில் பக்தர்கள் தினமும் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களை எதிர்நோக்கி கணிசமான யாசகர்களும் அம்மா மண்டபம் பகுதியில் படுத்து உறங்குவது வழக்கம். அதே போல நேற்று இரவும் அவர்கள் அவ்வாறு தங்களது இரவு உணவை முடித்துவிட்டு சாலையோரம் படுத்து உறங்கியுள்ளார்.
இந்த நிலையில் நள்ளிரவில் சுமார் 12 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர் தனது காரை ஓட்டிக்கொண்டு அம்மா மண்டபம் பகுதிக்கு சென்றார். அவருடன் அதே காரில் அஸ்வந்த் (21) என்பவரும் உடன் இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. காரை நிறுத்த லட்சுமிநாராயணன் முயற்சி செய்தார்.
ஆனாலும் அந்த கார் திடீரென்று சாலையோரம் இருந்த நடைமேடையில் ஏறியது. அங்கு நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று பேர் உடல் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு யாசகர் உடல் நசுங்கி பலியானார். நள்ளிரவில் பயங்கர சத்தம் கேட்டு அந்த பகுதியில் சென்றவர்கள், அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.
பின்னர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய இரண்டு பேரையும் அவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் யாசகர்கள் 2 பேரும் இன்று காலை அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களின் பெயர் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. 3 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே யாசகர்கள் மீது கார் ஏறியதை கண்டு ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காரை ஓட்டி வந்த லட்சுமி நாராயணன் மற்றும் அஸ்வந்தை பிடித்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இந்த கோர விபத்து சம்பவத்தை கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் போராட்டமும் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய லட்சுமி நாராயணன், அஸ்வந்த் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த யாசகர்கள் மீது கார் ஏறி மூன்று பேர் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்தப் பகுதி பொதுமக்கள் கூறும்போது, கொரோனா பேரிடருக்கு பின்னர் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. யாசகர்களை ஒழுங்குபடுத்தி அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.