பைக் மீது கார் மோதி பயங்கர விபத்து.. 10-ம் வகுப்பு மாணவி பலி!

 
Sholinghur

சோளிங்கர் அருகே கார் விபத்தில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதியில் உள்ள திடீர் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (40). இவர் டிவிஎஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரியா (15). இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவர், நேற்று தனது தந்தை உடன் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

அப்போது, திருவள்ளுவர் மாவட்டம் ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர், பில்லாஞ்சி வழியாக சோளிங்கர் நகரை நோக்கி காரில் வேகமாக வந்துள்ளார். அப்போது காரானது திடீர் நகர் பகுதியில், சங்கர் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்த போது மோதி விபத்துக்குள்ளானது.

Accident

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து இருந்த மாணவி பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது தந்தை இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோளிங்கர் போலீசார், கார் விபத்தில் பலியான மாணவி பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து, கார் ஓட்டுநர் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Sholinghur PS

இந்நிலையில், விபத்தில் இறந்த மாணவி பிரியாவின் உறவினர்கள், சோளிங்கர் அரசு மருத்துவமனை எதிரே, பிரியாவின் உயிரிழப்பு மற்றும் அவரது தந்தை சங்கரின் இரு கால்கள் துண்டிக்கப்பட்டதற்கு இழப்பீடு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் சோளிங்கரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

From around the web