ஒரே வீட்டில் கொத்துக்கொத்தாக பாம்புகள்... 6 கொம்போறி மூக்கன் பிடிபட்டது.. பரபரப்பு காட்சிகள்!!

திண்டுக்கல் அருகே ஒரே வீட்டில் 6 கொம்பறி மூக்கன் பாம்புகள் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அம்பாத்துறை ஊராட்சி காமாட்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் நம்பிராஜன். ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலரான இவர் ஓடுகள் வேயப்பட்ட வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டின் முகப்பு ஓட்டில் பாம்பு ஒன்று தெரிவதை கண்ட அதிர்ச்சி அடைந்த நம்பிராஜன் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குஇ விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் புனித் ராஜ் மற்றும் முதன்மை தீயணைப்பு வீரர்களான அழகேசன், சோலைராஜ் மற்றும் பரத் ஆகியோர் கொண்ட குழுவினர் ஓடுகளுக்குள் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர். பின்னர் அருகிலேயே மற்றொரு பாம்பும் இருந்தது.
அதனை தொடர்ந்து வரிசையாக வீடு முழுவதும் ஓடுகளுடைய விரிசல்களில் ஆங்காங்கே பாம்புகள் தென்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி வீட்டில் இருந்த 6 கொம்பேறி மூக்கன் பாம்புகளை பிடித்தனர்.
இதனையடுத்து வீட்டில் இருந்தவர்களும், அப்பகுதி பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். பின்னர் வெயில் காலம் தொடங்கியுள்ளதால் பாம்புகள் குளிர்ந்த இடத்திற்கு வருவது இயல்பானது என்றும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுரை வழங்கினர்.