60 ஆண்டு கால கனவு.. அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
Athikadavu

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளுக்கும் மேலான கனவாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இருந்து வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது ரூ.1,916 கோடியே 41 லட்சம் செலவில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 

Athikadavu

இந்த நிலையில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள 31 ஏரிகள், 1,045 குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நிரப்பப்படும். இதனால் விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவதோடு 3 மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Athikadavu

மேலும் இந்த திட்டத்தின் மூலமாக 50 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள். அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதன் மூலமாக, விவசாயிகளின் 65 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறியுள்ளது.  

From around the web