தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி 19 வயது பெண் பலி.. தந்தை கண்முன்னே சோகம்!

 
Ranipet

வேலூர் அருகே தனியார் பேருந்து மோதி 19 வயது பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு 2 மகள்கள் இருந்தனர். இந்த நிலையில், இவர் நேற்று வேலூரில் இருந்து பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அரப்பாக்கம் நோக்கி தனது 2 மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேலூர் அடுத்த பெருமுகை பகுதியில் பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அப்பகுதியைக் கடக்கும் போது பின்னால் வந்த தனியார் பேருந்து லேசாக வெங்கடேஷின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

Accident

இதில் நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்ததில் வெங்கடேசனின் இரண்டாவது மகள் சுவேதா (19) மீது தனியார் பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  தங்கள் கண் முன்னே ஒரு மகள் பேருந்து சக்கரத்தில் நசுங்கி இறந்துயிருப்பதை பார்த்து வெங்கடேசனும், மற்றொரு மகளும் கதறி அழுதனர்.

விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்துவாச்சாரி போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sathuvachari PS

விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. பின்னர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். பாலத்தின் கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகவும் இதனால் அவ்வப்போது இதுபோன்ற தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web