மழை வெள்ளத்தில் காணாமல் போன 19 வயது இளைஞர்.. இன்று சடலமாக மீட்கப்பட்டதால் தாய் அதிர்ச்சி!

 
Nellai

மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மகனை, அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் தேடி வந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17-ம் தேதி அதி கனமழை பெய்தது. தொடர்ந்து பல மணிநேரமாக இடைவிடாது பெய்த பேய் மழை காரணமாக இந்த 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

அதிலும் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை அளவு பதிவாகி இருப்பதால் இரு மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள், வீடுகள், கோவில்கள், பேருந்து நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

Nellai

இந்த நிலையில் நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த சேர்மன் ஆறுமுகக்கனி தம்பதியின் மகன் அருணாச்சலம் (19). இவர் கடந்த 17-ம் தேதி தனது பைக்கில் நெல்லை என்ஜிஓபி காலனி வழியாக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள குளம் ஒன்று நிரம்பி ஊருக்குள் தண்ணீர் சென்றது. சாலை ஓரமாக இருந்த ஓடை முழுவதும் தண்ணீர் சென்றது. இது தெரியாமல் அருணாச்சலம் அந்த ஓடைக்குள் சென்ற வெள்ளத்தில் பைக் உடன் சிக்கிக்கொண்டார்.

அதேசமயம் வீட்டில் இருந்து சென்ற அருணாச்சலம் எங்கு சென்றார், என்ன ஆனார் என்ன தெரியாமல் அவரது தாய் கடந்த இரண்டு தினங்களாக பரிதவித்து வந்தார். மேலும் தனது மகனை சோகத்தோடு அவர் தேடுவது போன்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது.

dead-body

இந்த நிலையில் என்ஜிஓபி காலனி அருகே உள்ள ஓடையில் இன்று அருணாச்சலம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை அருணாச்சலத்தின் பைக் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. மேலும் இதன் மூலம் நெல்லையில் மழை பாதிப்பால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 8 ஆகஅதிகரித்துள்ளது.

From around the web