20 பேருடன் 15 நிமிட வீடியோ கால்.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குங்க விஜய்?
கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு எக்ஸ் தள பதிவு, ஒரு வீடியோ என்று இரண்டே இரண்டு தடவை மட்டும் தான் விஜய் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். இரண்டு கருத்துகளுக்கும் அவ்ர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. வீடியோவுக்கு விஜய் எதிர்பார்க்காத அளவுக்கு எதிர்ப்புகள் எழுந்தது.
இந்நிலையில் அரசியல் அனுபவமிக்கவர்களை துணைக்கு வைத்துக் கொண்டு கட்சியை நடத்த வேண்டும். கரூருக்கு சென்று பகீரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று விஜய் யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் சொன்னதாகவும் அதை விஜய் கேட்டுக்கொண்டதாகவும் ஒரு தகவல் பரவுகிறது.
மற்றொரு புறம் கரூரில் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஒவ்வொருவரிடமும் 15 முதல் 20 நிமிடம் வரை பேசியதாகவும் ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சென்று வீடியோ கால் மூலம் விஜய்க்கு இணைப்பு ஏற்படுத்தியதாகவும் ஆனால் நிர்வாகிகளுக்கு போட்டோ, வீடியோ எடுக்க அனுமதிக்கவில்லை என்றும் அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது.
கட்சியின் மாநாட்டிலேயே 15 -20 நிமிடம் தான் பேசுகிறார் விஜய். பிரச்சாரப் பயணத்தில் அதைவிடவும் குறைவாகப் பேசுகிறார். ஒவ்வொரு குடும்பத்தினருடனும் 15 முதல் 20 நிமிடம் விஜய்யால் என்னதான் பேசியிருக்க முடியும்? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டாமா?
இறந்தவர்களின் உறவினர்கள் சிலரிடம் தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. விஜய் பேசியதாகவும், ஆறுதல் சொன்னதாகவும் வழக்கு முடிந்து அனுமதி கிடைத்ததும் நேரில் வந்து சந்திப்பதாகவும் சொன்னார் என்று கூறியுள்ளனர். மொத்தமாக 15- 20 நிமிடத்தில் 20 பேரிடம் பேசியதைத் தான் தனித்தனியாக 15 -20 நிமிடம் என்று பரப்பி விட்டார்களோ?
