14 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்து.. 2 சிறுவர்கள் பலி.. பெற்றோருக்கு தெரியாமல் கார் ஓட்ட பழகியபோது விபரீதம்!
கபிலர்மலை அருகே 14 வயது சிறுவன் ஓட்டி வந்த காரால் விபத்து ஏற்பட்டு 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலை அருகே பெரிய மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் லோகேஷ் (17). அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமியின் நெருங்கிய உறவினர் ரமேஷின் மகன் சுதர்சன் (14). இவர்கள் தற்போது குடும்பத்துடன் கபிலர்மலை பரமத்தி செல்லும் சாலையில் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் லோகேஷ் மற்றும் சுதர்சன் இருவரும் காரை எடுத்துக்கொண்டு நேற்று (ஜூன் 10) இரவு பரமத்தி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் கபிலர்மலை செல்ல ஜேடர்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த காரும், சிறுவர்கள் ஓட்டி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் சிறுவர்கள் ஓட்டி வந்த கார் சுக்கல், சுக்கலாக நொறுங்கியது. இதில், லோகேஷ் மற்றும் சுதர்சன் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த கபிலர்மலை அருகே உள்ள கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜேடர்பாளையம் போலீசார், சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.