ஹோம் டூர் வீடியோ போட்ட யூடியூபர்... வீட்டில் கொள்ளை அடிக்க முயன்ற புதுச்சேரி வாலிபர் கைது!!

 
Coimbatore

கோவையில் யூடியூபர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஹைல் (29). இவரது மனைவி பாபினா (28). இவர்கள் இருவரும் சேர்ந்து சுஹைல் விலாகர் மற்றும் சைபர் தமிழா ஆகிய யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். இந்த தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது.

யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்தை கொண்டு கோயம்புத்தூர் கே.ஜி.சாவடி பிச்சனூர் பகுதியில் தனக்கு சொந்தமாக கனவு இல்லம் என்ற வீட்டை இவர்கள் கட்டி வந்தனர். இந்த வீட்டின் கட்டுமான பணி ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் தங்களது யூடியூப் சேனலின் சப்ஸ்க்ரைபர்களுடன் வீடியோக்களை பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வந்தனர்.

Robbery

இவர்களது கனவு இல்லத்தின் பணி முடிந்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கிரகப்பிரவேசம் செய்து புது வீட்டில் குடியேறினர். அந்த வீட்டில் தான் தற்போது வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று கொள்ளையர்கள் அதற்கு முந்தைய இரவே இவர்களின் வீட்டிற்கு வந்து மொட்டை மாடியில் பதுங்கி இருந்திருக்கின்றனர்.

பின்னர் ஒரே ஒரு கொள்ளையன் மட்டும் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டி சுஹைலிடம் கத்தியை காட்டி மிரட்டி  கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.  உடனே சுதாரித்துக் கொண்ட சுஹைல், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஜி. சாவடி போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

KG Chavadi

போலீசார் விசாரணையில் கொள்ளையடிக்க வந்த நபர் புதுச்சேரியைச் சேர்ந்த அனுராம் (25), என்பதும், யூடியூப் மூலம் சுஹைல் அதிக பணம் சம்பாதித்து உள்ளதாகவும், அதை கொள்ளையடிக்கும் நோக்கில் புதுச்சேரியில் இருந்து அனுராம் கோவைக்கு வந்ததும் தெரியவந்தது. இவரும் சுஹைலின் சேனல் சப்ஸ்கிரைப் என்பது தான் அதிர்ச்சியான உண்மை. அவரது  வீடியோக்களை பார்த்து தானும் குறுகிய  வழியில் சம்பாதித்து பணக்காரனாக வேண்டும் என்ற திட்டத்துடன் இந்த தவறான செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

From around the web