அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

 
ADMK-BJP-Stage-Walkout-Form-TN-Assembly-in-University

துணைவேந்தர் நியமன மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில் அவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.

மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உடன் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். துணைவேந்தர் நியமனத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கூறி பாஜக வெளிநடப்பு செய்தது.

அதேவேளை, பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற அதிமுக பல்கலைக்கழக துணை வேந்தர் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அறிவித்தது. அதன்பின்னர், காங்கிரஸ்-அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அவையில் அமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவாக வார்த்தையை பயன்படுத்தி, பேசிய காரணத்தால் அவரை (அமைச்சர் பெரியகருப்பன்) கண்டித்து அவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்கிறது.

தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்த மசோதா சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை அதிமுக ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அறிவித்ததற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், பல்வேறு கட்டங்களில் பல்வேறு கருத்துக்கள் இந்த சட்டமசோதாவின் உட்பொருள் குறித்து பேசப்பட்டிருக்கிறது.

ஆனால், இதுவரை யாரும் சட்டமுன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்றவில்லை என்பதை நாங்கள் இங்கே கருத்தாக பதிவு செய்கின்றோம். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் திமுக இரட்டை வேடம் போடுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் ஆளுநருக்கென்று தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்திற்கு உட்பட்டுதான் யார் ஆளுநராக இருந்தாலும் செயல்பட முடியும். அந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு புரம்பாக எந்த ஆளுநரும் செயல்பட முடியாது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி ஆளுநர் தான் துணைவேந்தர்களை நியமனம் செய்ய வேண்டும் என இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை. ஆனால், பல்வேறு கருத்துக்கள் இருக்கிறது. அரசு நியமிக்க வேண்டும் என்ற கருத்தும், கவர்னர் நியமிக்க வேண்டும் என்ற கருத்தும் இருக்கிறது. அதை தமிழ்நாடு அரசு தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.

அப்போது, குறுக்கிட்டு பேசிய அதிமுக எம்.எல்.ஏ. கேபி முனுசாமி, வெளிநடப்பு செய்ததற்கு காரணமே அமைச்சர் பெரியகருப்பன் சட்டமன்ற உறுப்பினரை கடுமையான விமர்சனம் செய்த காரணத்தினால் தான். அப்படி விமர்சனம் செய்கின்றபோது அவையில் இருக்கின்ற முதல்வர் அவரை கட்டுப்படுத்தாமல் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையிலே கருத்து கூறியதால் தான் அதிமுக வெளிநடப்பு செய்தது’ என்றார்.

From around the web