செல்பி எடுத்தபோது விபரீதம்! செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்து இளைஞர்கள் பலி!!

 
Chennai

செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்ற இரு இளைஞர்கள் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை குன்றத்தூர் அருகே உள்ள தரப்பாக்கம், பாரதியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவருடைய மகன் விக்னேஷ் (20). கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட்ஸ் (16), அங்குள்ள பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் பைக்கில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். 

Chemberampakkam

செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்த்துவிட்டு, ஏரிக்குள் இறங்கி அங்கிருந்த சிறிய மதகின் அருகே இறங்கி நின்று இருவரும் தங்களது செல்போனில் 'செல்பி' எடுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் செம்பரம்பாக்கம் ஏரிக்குள் தவறி விழுந்துவிட்டனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர். 

இதனை கண்ட அங்கிருந்தவர்கள், 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியாததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் விக்னேஷ், ரிச்சர்ட்ஸ் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் விழுந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டனர். 

dead

இதையடுத்து குன்றத்தூர் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரியில் நண்பருடன் குளித்த ப்ளஸ்-2 மாணவன் ஒருவரும், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியானான் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web