கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்..! ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை!

 
Kanniyakumari

கன்னியாகுமரி அருகே கடன் தொல்லையால் குடும்பத்தோடு மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்து உள்ள வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (52). இவரது மனைவி ராஜேஸ்வரி (46). இவர்களது மகள் நித்யா (22). இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக அவரது மகள் நித்யாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் பிரச்சனை காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக நித்தியா விவாகரத்து பெற்றுக் கொண்டு தந்தையுடன் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கணவனிடம் விவாகரத்து கேட்டு நித்யா நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மகளின் மணவாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற மன வேதனையில் இருவரும் இருந்திருக்கின்றனர். இந்த வேதனையால் ராஜேஸ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டுனரான கிருஷ்ணனுக்கு சிறிது கடன் பிரச்சினையும் இருந்துள்ளது. இதனால் பெரும் மனவேதனையில் தவித்து வந்தனர்.

poison

இந்நிலையில் நேற்று இரவு மூவரும் படுக்கச் சென்றுள்ளனர். காலையில் வெகு நேரம் அவர்கள் யாரும் வெளியில் வராததால் சந்தேகப்பட்ட மாடியில் வசிக்கும் கிருஷ்ணனின் தாயார் வள்ளியம்மாள் கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார்.

அப்போது வாயில் கதவு தாழிடப்படாமல் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து கதவைத் திறந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையிலேயே மூவரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அருமனை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Arumanai

மேலும் அவர்கள் அங்கு சோதனை செய்தபோது அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், தங்கள் சாவுக்கான காரணத்தை அவர்கள் எழுதி வைத்திருந்தனர். கடன் தொல்லை மற்றும் மகளின் வாழ்க்கை ஆகியவற்றால் மன வேதனைக்கு உள்ளாகியிருக்கிறோம். தொடர்ந்து கஷ்டங்கள் வருவதால் சாவது என முடிவெடுத்தோம். எங்கள் உடல்களை எங்களுக்கு சொந்தமான அரை சென்ட் நிலத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

மகளின் மணவாழ்க்கை மற்றும் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web