ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம்... 3 லட்சத்தை இழந்த இளைஞர் - கடிதம் எழுதி வைத்து விபரீத முடிவு

 
balan

தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தெய்வச் செயல்புரம் அருகே உள்ள இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகன் பாலன். இவர் தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். ஆன்லைனில் பொழுதுபோக்காக ரம்மி விளையாட தொடங்கிய இவர், நாளடைவில் ரம்மி விளையாட்டிலே பொழுதை கழித்து வந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சுமார் 3 லட்சத்தை ஏற்கனவே அவர் இழந்துள்ளார்.

rummy

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலனின் தந்தை ஆவுடையப்பன் பாலனிடம் ரூபாய் 50 ஆயிரம் கொடுத்து வங்கியில் கட்டச் சொல்லியுள்ளார். அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் போட்டு பணத்தை இழந்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த பாலன் நேற்று தனது நண்பர் செல்போனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூபாய் 50 ஆயிரம் இழந்துவிட்டேன் எனவே எனது முடிவை நானே தேடிக்கொள்கிறேன் என மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டில் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Thattaparai-PS

இந்த சம்பவம் தொடர்பாக பாலனின் தந்தை ஆவுடையப்பன் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து பாலனின் உடல் மற்றும் அவரது செல்போனை கைபற்றிய தட்டப்பாறை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியை எப்படியாவது தடை செய்யுங்கள் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு தொடர்ந்து தற்கொலைகள் நடந்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தையும் பீதியையும்  ஏற்படுத்தியுள்ளது.

From around the web