சோகம்! முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்..! தலைவர்கள் இரங்கல்

 
Avvai-Natarajan

முதுபெரும் தமிழறிஞரும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன் காலமானார. அவருக்கு வயது 85.

1936-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் பிறந்தவர் அவ்வை நடராஜன். இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் ஆய்வுகள் மூலம் முனைவர் பட்டம் பெற்றார். மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை சரபோஜி அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். டெல்லியில் அகில இந்திய வானொலி நிலைய செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் பணிகளை ஏற்றார்.

Avvai-Natarajan

1975 முதல் 1984-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநராக பணியாற்றினார். 1984 முதல் 1992-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமல் அரசு துறை செயலராக முதன் முதலில் நியமிக்கப்பட்டவர் அவ்வை நடராஜன்.

1992 முதல் 1995-ம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். 2014-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். 2015-ம் ஆண்டு முதல் சென்னை பாரத் பல்கலைக் கழகத்தின் வேந்தராக பதவி வகித்தார். 

RIP

சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த அவ்வை நடராஜன், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா- புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வைரமுத்து உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

From around the web