சோகம்! சாலையின் குறுக்கே வந்த நாய்... திடீர் பிரேக் போட்ட இளைஞர் தவறி விழுந்து பலி!

 
boy acci

சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைத்தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த கவுன்சிலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் சென்னங்காரணி கிராமத்தில் வசித்து வந்தவர் அருண்பாண்டி (24). இவர் சென்னங்காரணி ஊராட்சி மன்ற 6-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வந்தார். இவர் வெங்கல் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

accident

இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி திருநின்றவூருக்கு தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு திருமணம் முடிந்து நேற்று முன்தினம் இரவு தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 

திருநின்றவூர்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் உள்ள வடமதுரை ஊராட்சியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறிய அவர் உடனே பிரேக் பிடித்தார். இதில் நிலைத்தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையில் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது. 

periyapalayam police station

இதனால் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அருண்பாண்டி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார், அருண்பாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web