சோகம்! மாலத்தீவு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குமரி தம்பதி பலி!!

 
KK

மாலத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குமரி தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலத்தீவு தலைநகர் மாலேவில் மாவேயோ மசூதிக்கு அருகில் உள்ள மாபன்னு வார்டில் நிருபேஹி என்பவருக்கு சொந்தமான 4 மாடி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள கார் பழுது பார்க்கும் நிறுவனம் உள்ளது. இங்கு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. வாகனங்களில் பெட்ரோல், டீசல் இருந்ததால், மள மளவென 4 மாடியிலும் தீ பரவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராட்டத்துக்கு பின் நேற்று அதிகாலை முழுமையாக தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 9 இந்தியர்கள், ஒருவர் வங்க தேசத்தை சேர்ந்தவர் என 11 பேர் உயிரிழந்தனர். 

Maldives

இதில் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட காஞ்சிரகோடு, கொல்லன்விளாகம் சேர்ந்த கணவன்- மனைவியான எட்வின் ஜெனில் (44), சுந்தரி (40) உட்பட 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

உயிரிழந்த எட்வின் ஜெனிலின் சகோதரர் முன்னாள் படைவீரரான எட்வின் ராபி கூறுகையில், 'எனது தம்பி எட்வின் ஜெனில் மாலத்தீவில் தங்கியிருந்து கொத்தனார் கான்ட்ராக்ட் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது மனைவி சுந்தரி ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர். அவரும் உடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். குழந்தைகள் இல்லை. தினசரி காலை எங்களை போனில் தொடர்பு கொண்டு ஜெனில் பேசுவார்.

dead-body

நேற்று முன்தினம் இரவு முதல் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அங்குள்ள மற்றவர்களிடம் விசாரித்தோம். இதில் மாலத்தீவில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் தீ விபத்து நடந்தது தொடர்பான தகவல் தெரியவந்தது. இதனை அங்குள்ள எனது மற்றொரு தம்பி எட்வின் ஜெகனிடம் தெரிவித்து அவரும் நேரில் சென்று பார்த்து வீட்டில் தீ பிடித்ததை உறுதி செய்தார். பின்னர் உடல்களை அடையாளம் கண்டு எட்வின் ஜெனில், சுந்தரி என்பதை உறுதி செய்தார்' என்று தெரிவித்தார்.

From around the web