சோகம்! கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு!! தவறான சிகிச்சை என குடும்பம் கதறல்

 
Chennai

சென்னையில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் பிரியா (17). இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் பிரியா மூட்டு வலியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியாவை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது பிரியாவின் வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறினர்.

Chennai

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையை தொடர்ந்து தனது கால்வலி குணமாகும். மீண்டும் கால்பந்து போட்டியில் சாதிக்கலாம் என அவர் நினைத்தார். ஆனால் பிரியாவின் கால் வீக்கம் ஏற்பட்டு காணப்பட்டது. இதனால் அவர் சிரமத்தை சந்தித்தார்.

இதையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதும், அதனால் தான் அறுவை சிகிச்சைக்கு பிறகு கால் வீங்கியதும் தெரியவந்தது. இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் எனக்கூறி அவரது வலது கால் அகற்றப்பட்டது.

Chennai

மருத்துவர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம். அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களின் மகளின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை அமைத்து தரவேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிகைக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரியா இன்று காலை உயிரிழந்தார். காலை 7.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரியாவின் இந்த மரணத்தால் ராஜீவ் காந்தி மருத்துமவனையில் பதற்றமான சூழல் உள்ளது. இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

From around the web